இதுதான் மேலைத்தேய நாகரிகமோ?


வித்தியாசம் புரிகிறதா?

குழந்தை கட்டப்பட்டுள்ள நிலையிலும், நாய் அவிழ்க்கப்பட்ட நிலையிலும் அழைத்துச் செல்லப்படுகின்றன.

இது எனது நண்பன் நி்ஷாந்தன் 2003ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த போது இத்தாலியில் படமாக்கப்பட்ட காட்சி.

எப்படியிருக்கிறது?

மறக்கமுடியாத பயணங்கள்.

நேற்று நடந்தது போல் நெஞ்சில் நிறைந்துள்ள நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது சில சுகமாகவும் சில சுமையாகவும் கனக்கின்றன. அத்தகைய ஓர் சுகமான அனுபவம்தான் A9 பயணம். இப்போது நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.

நண்பர்களுடன் செல்கிற ஜாலியும், வீடு செல்கிற சந்தோசமும் ஒருங்கே சேரும் போது, சிரமங்கள் நிறைந்ததாயினும் அவையனைத்தும் மறைந்து போகுமளவுக்கு சுகமான பயணமாக, நினைக்கையில் இனிக்கக்கூடியதாக நெஞ்செங்கும் நிறைந்து கிடக்கிறது.

Semester இறுதி நாள் அன்று இரவு 9.30 புகையிரதத்துக்கு முன்கூட்டியே ஆசன முற்பதிவுகள் செய்யப்பட்டுவிடும். வீட்டுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தால் அவற்றையெல்லாம் மாலையிலேயே வாங்கி முடித்து, சரியான நேரத்துக்கு எல்லோரும் புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் ஆஜராகி விடுவோம். புகையிரதப் பெட்டி அதிரும் வகையில் எமது பாட்டும் கூத்துமாக எமது அட்டகாசங்கள் அமைந்திருக்கும். (இடையிடையே மெல்லிய தொனியில் புரட்சிப் பாடல்களும் வந்து போகும்)

மறுநாள் அதி காலை 5.45 மணியளவில் வவுனியாவை சென்றடைந்து விடுவோம். ஓமந்தை சோதனைச் சாவடியில் வழமையான உபசரிப்பக்களைத் தாண்டி வன்னி மண்ணினுள் காலடி எடுத்துவைக்கும் போது இனம்புரியாத பரவசம் ஒன்று மனதின் ஓரத்திலிருந்து எட்டிப் பார்க்கும்.

நம்மவர்களின் சோதனைகள் நிறைவுற்றதும் முகமாலைக்கான பேருந்தில் ஏறும் போது, அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக தாண்டிய திருப்தி மனதில் ஒட்டிக்கொள்ளும்.
இரு புறமும் பரந்துகிடந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் வனப்பை ரசித்தபடி பயணம் மீண்டும் களைகட்டும். திருமுருகண்டியில் பேரூந்து சிறு ஓய்வுக்காக தரிக்கும். பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து, காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு எல்லோரும் கடலை பொதிகளுடன் பிரயாணத்தை தொடருவோம்.

முகமாலையை வந்தடைந்து இருதரப்பினதும் சோதனைகளை முடித்துக்கொண்டு யாழ் பேருந்து நிலையத்துக்கான பேருந்தில் ஏறும் போது பயணம் நிறைவுக் கட்டத்தை அடைவதை உணருவோம்.
இறுதியாக பேருந்து நிலையத்தில் ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டு அவரவர் வீடுகளுக்கு பயணமாவோம்.

இப்போது நினைத்தாலும் பசுமையாயிருக்கும் இந்த நெடும் பயணம், மீண்டும் எப்போது சாத்தியப்படும் என ஏங்கும் என்னைப் போன்றோர் ஏராளமே!

தமிழை வாழவைப்போம் வளரவைப்போம். !

வணக்கம்!
இது எனது முதல் முயற்சி. எண்ணத்தில் தோன்றுவனவற்றையெல்லாம் எழுத வேண்டுமென்று நினைக்கும் போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இப்போதுதான் காலம் கூடிவந்துள்ளதென நினைக்கிறேன்.
தமிழனாய்ப் பிறந்து தரணியிலே எங்கெங்கோ எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள் இங்கே வலைப்பதிவுகளின் மூலம் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஓர் பிணைப்பில் நானும் இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்பதெல்லாம் வெறும் சொற்றொடராகவே அழிந்து போய்விடும். ஏனெனில் தமிழ் இங்கே வலைப்பதிவுகளிலே தவழ்ந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தமிழ் ஈடுகொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிதாகப் படைக்கப்படுகின்ற ஒவ்வோரு தமிழ் படைப்புக்களும் இணையத்தின் உதவியுடன் உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்செல்லப்படுகிறது.
இதுவே போதும் "மெல்லத் தமிழ் இனிவாழும்" என்ற நம்பிக்கையுடன் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கலாம்.
தமிழை வாழவைப்போம் வளரவைப்போம்.