மறக்கமுடியாத பயணங்கள்.

நேற்று நடந்தது போல் நெஞ்சில் நிறைந்துள்ள நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது சில சுகமாகவும் சில சுமையாகவும் கனக்கின்றன. அத்தகைய ஓர் சுகமான அனுபவம்தான் A9 பயணம். இப்போது நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.

நண்பர்களுடன் செல்கிற ஜாலியும், வீடு செல்கிற சந்தோசமும் ஒருங்கே சேரும் போது, சிரமங்கள் நிறைந்ததாயினும் அவையனைத்தும் மறைந்து போகுமளவுக்கு சுகமான பயணமாக, நினைக்கையில் இனிக்கக்கூடியதாக நெஞ்செங்கும் நிறைந்து கிடக்கிறது.

Semester இறுதி நாள் அன்று இரவு 9.30 புகையிரதத்துக்கு முன்கூட்டியே ஆசன முற்பதிவுகள் செய்யப்பட்டுவிடும். வீட்டுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தால் அவற்றையெல்லாம் மாலையிலேயே வாங்கி முடித்து, சரியான நேரத்துக்கு எல்லோரும் புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் ஆஜராகி விடுவோம். புகையிரதப் பெட்டி அதிரும் வகையில் எமது பாட்டும் கூத்துமாக எமது அட்டகாசங்கள் அமைந்திருக்கும். (இடையிடையே மெல்லிய தொனியில் புரட்சிப் பாடல்களும் வந்து போகும்)

மறுநாள் அதி காலை 5.45 மணியளவில் வவுனியாவை சென்றடைந்து விடுவோம். ஓமந்தை சோதனைச் சாவடியில் வழமையான உபசரிப்பக்களைத் தாண்டி வன்னி மண்ணினுள் காலடி எடுத்துவைக்கும் போது இனம்புரியாத பரவசம் ஒன்று மனதின் ஓரத்திலிருந்து எட்டிப் பார்க்கும்.

நம்மவர்களின் சோதனைகள் நிறைவுற்றதும் முகமாலைக்கான பேருந்தில் ஏறும் போது, அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக தாண்டிய திருப்தி மனதில் ஒட்டிக்கொள்ளும்.
இரு புறமும் பரந்துகிடந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் வனப்பை ரசித்தபடி பயணம் மீண்டும் களைகட்டும். திருமுருகண்டியில் பேரூந்து சிறு ஓய்வுக்காக தரிக்கும். பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து, காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு எல்லோரும் கடலை பொதிகளுடன் பிரயாணத்தை தொடருவோம்.

முகமாலையை வந்தடைந்து இருதரப்பினதும் சோதனைகளை முடித்துக்கொண்டு யாழ் பேருந்து நிலையத்துக்கான பேருந்தில் ஏறும் போது பயணம் நிறைவுக் கட்டத்தை அடைவதை உணருவோம்.
இறுதியாக பேருந்து நிலையத்தில் ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டு அவரவர் வீடுகளுக்கு பயணமாவோம்.

இப்போது நினைத்தாலும் பசுமையாயிருக்கும் இந்த நெடும் பயணம், மீண்டும் எப்போது சாத்தியப்படும் என ஏங்கும் என்னைப் போன்றோர் ஏராளமே!

3 comments:

said...

வணக்கம் சஞ்யே...

said...

//(இடையிடையே மெல்லிய தொனியில் புரட்சிப் பாடல்களும் வந்து போகும்)//

O/L படிக்கும் காலத்தில் பெரும்பான்மைச் சிங்கள மாணவர்களோடு ஒரு சில தமிழ் மாணவர்களும்(Ratio 6:1)சேர்ந்து சென்ற பாடசாலைச் சுற்றுலாவில் பாடியது நினைவுக்கு வருகிறது..

குறிப்பாக "அப்பு காமி" பாடல்.. தங்களுக்கு தெரியாத சிங்களப் பாடல் என அவர்கள் ஆச்சரியப்பட்டமையும் நாங்கள் சிரித்தே சமாளித்தமையும்...

ஏதோ ஒன்றைச் சாதிக்கும் அற்ப திருப்தியில் தான்.. வேறென்ன?

said...

சுகமான அனுபவம் தான்